To realise the developed India by 2020

Wednesday, June 3, 2020

[India_Vision_2020] இயற்கை தந்த வரம்

 

முகவரி அன்பு தம்பி தங்கைகளுக்கு...

இயற்கை தந்த வரம்

இந்த ஊரடங்கு காலத்தில் (10 வாரங்கள் - 70 நாட்களில்) முதல் 21 நாட்கள் சென்னையில் இருந்தேன்.. அடுத்த 47 நாட்கள் என் சொந்த ஊரில் (ஆராத்தி அக்கராகாரம், ஆத்தூர் வட்டம், சேலம் மாவட்டம்) தங்கி இருந்தேன். (மீதமுள்ள 2 நாட்கள் ஊருக்கு செல்ல, வர, பர்மிஷன் வாங்க என சென்றது...)

இந்த ஊரடங்கு காலத்தில் நமக்கு அரசாங்கம் என்ன சொன்னதோ (கட்டுப்பாடுகளை), அதை நான் முழுமையாக கடைப்பிடித்தேன்... அந்த முழுமை எனக்கு ஒரு வித திருப்தியைக் கொடுத்தது...

இந்த ஊரடங்கு சமயத்தில் அரசாங்கத்தின் செயல்பாட்டின் மீது என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் இருக்கு. அதே சமயத்தில், இங்கே நம் மக்கள் மீதும் நிறைய தவறு உள்ளது (யாருக்கு என்ன நடந்தால் என்ன_ நமக்கு நம் வேலை முக்கியம் என்று ஊர் சுற்றியது_ நோயின் தன்மை தெரியாமல்)

அரசாங்கம் கையாண்ட பிரச்சினைகளில் என்னை பாதித்தது குறிப்பாக... புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவர்கள் பட்ட அவஸ்தை நிச்சயமாக வார்த்தையால் சொல்ல முடியாது. அவர்களை,அரசாங்கம் கையாண்ட விதம் பெரிய வலியை உருவாக்கி விட்டது... அதேபோல் தேவையில்லாமல் டாஸ்மாக் கடையை திறந்து, எல்லோர் இதயத்தையும் காயப்படுத்தியது தான் மிச்சம் என்பதே நிதர்சன உண்மை...

வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது இந்த கொடிய வைரஸ் நோயான கரோனா... மக்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும்... பொருளாதாரரீதியாக எல்லோரும் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு பின் சென்றுவிட்டனர் என்பதே உண்மையாகும்...

எனக்கு தெரிந்து, எங்கள் முகவரி அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள ஒரு டீ கடை, ஏழு நபர்களை (பீகார் தொழிலாளிகள்_தற்போது அனைவரும் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள்) வைத்து கடை நடத்தி வந்த ஆனந்த் அண்ணா... இன்று மூன்று மாதங்களாக வாடகை கூட தர முடியாமல் (முன்பே கடன் வாங்கி தான் கடையை நடத்திவந்தார்), தற்போது கடை இருந்த இடம் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட, 15 வருடங்களுக்கு முன்பு, தான் எப்படி சைக்கிளில் சென்று Tea விற்பனை செய்தாரோ, அதேபோல் இன்று மீண்டும் அதே நிலைமைக்கு வந்து விட்டார் (கடன் இருந்தாலும் சமாளித்துக் கொண்டிருந்த இந்த மனிதனை, இந்த வைரஸ் நோய் _ஊரடங்கு காலம் சமாளிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது).

இவரைப்போல்  எத்தனை ஆயிரம் பேர் நொடிந்து போய் இருப்பார்கள். மீண்டு வர முடியாத சூழ்நிலை எத்தனை பேருக்கு இருந்திருக்கும்... நினைத்து கூட பார்க்க முடியவில்லை... ஏன் முகவரிக்கு கூட  பொருளாதாரரீதியாக பிரச்சனை வரலாம்... போகப்போகத்தான் எனக்கு தெரிய வரும் என்பதே உண்மை...

இதையெல்லாம் தாண்டி, தனிப்பட்ட முறையில் இந்த ரமேஷ் க்கு இந்த ஊரடங்கு காலம் இயற்கை தந்த வரமே...

முதல் 21 நாட்கள் முகவரி மாணவர்களுக்கு இடையே (வாட்ஸ்அப் வழியாக) கட்டுரைப் போட்டி நடத்தி அவர்களைப் பற்றி நான் முழுமையாக அறிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது...

சரியாக 17 வருடங்களுக்குப் பிறகு என் அம்மாவுடன் நான் 47 நாட்கள் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியமான விஷயம்.  சிறு வயதில் இருந்தே அக்கா வீட்டில் தங்கி இருந்து பள்ளி கல்லூரி படிப்பு வரை படித்தேன். அக்காவுடன் தான் நான் அதிக காலம் தங்கியுள்ளேன். (2008ல் என் தந்தை இறந்த  சமயத்தில் தான் 16 நாட்கள் மட்டுமே அம்மாவுடன் இருந்தேன்)

இந்த 70 நாட்களில் நான்...

*இதுவரை பார்க்காத திரைப்படங்களைப் பார்த்தது...

*நிறைய புத்தகங்கள் படித்தது...

*முகவரி அன்புத் தம்பி தங்கைகளுக்கு_ 7 கட்டுரைகள் எழுதியது. (தோன்றத் தொண்டு, எங்கே இருக்கிறான் என் தலைவன், திசை மாறும் பாதை etc...)

*உதவும் உள்ளங்களுக்கும், உதவி தேவையுள்ள சமூக அமைப்புகளுக்கும் பாலமாக செயல்பட்டது (கரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது_மனத் திருப்தியை கொடுத்தது)

*முகவரி மூலம் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளிடம் அதிக நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது (இவர்களுக்கான தேவையைக் கேட்டு பூர்த்தி செய்ய முடிந்தது)

*வாரத்திற்கு இருமுறை, நம் பாரம்பரிய முறைப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்து  குளித்தது (புதன், சனி)...

*வாரத்திற்கு ஒரு முறை வாழை இலை குளியல்...

* 70 நாட்களும் தொடர்ந்து ஈஷா யோகா செய்தது...

*தினம் ஒரு வேளை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டது (காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள்)_ முடிந்தவரை இயற்கை உணவாக... இந்த 70 நாட்களும் ஒரு தவம் ஆகவே இதை கடைபிடித்தேன்...

*47 நாட்களும் , அந்த ஒரு வேளை சாப்பாடும் அம்மா மற்றும் தம்பியுடன்  அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டது...

*என் தங்கை சுபசவிதா வீட்டு கிணற்றில், 17 வருடங்களுக்குப் பிறகு நீச்சல்.(தங்கை மற்றும் தம்பி மகன்களுடன்)

*ஊரில் எங்கள் வீட்டுக்கு வரும் பள்ளி குழந்தைகளுக்கு அறநெறி பாடங்களை சொல்லிக் கொடுத்தது...(எங்கள் ஊர் பள்ளி படிக்கும் பக்கத்து வீட்டு-சுமார் பத்து மாணவ மாணவிகள், எப்போதும் எங்கள் வீட்டில் இருந்து கொண்டே இருப்பார்கள்)

*இந்த 70 நாட்களில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்ட தருணங்கள் தான் அதிகம்.

*இந்த 70 நாட்களில் பெரும்பாலும் நான் யாருக்கும் தேவையில்லாமல் போன் செய்யாமல் இருந்தேன். எனக்கு வந்த அழைப்புகளுக்கு மட்டுமே பேசினேன்...

இந்த 70 நாட்களும் தனிப்பட்ட முறையில் எனக்குள் நான் செய்த நல்லதை விட, நான் செய்த தவறுகளை எப்படி சரி செய்வது என்ற சிந்தனையோட்டம் தான்  அதிகமாக இருந்தது... இனிவரும் நாட்களில் அதை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்.(சமநிலையுடன் வாழ முயற்சிப்பது)

ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு காலம், மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் (ஏன் முகவரிக்கும் கூட),  தனிப்பட்ட முறையில், என்னை நானே சரி செய்வதற்கு, இந்த ரமேஷுக்கு இயற்கை கொடுத்த வரமே...

சமநிலை இல்லாத இந்த நூற்றாண்டு கால தவறுகளை, சரி செய்து, சமநிலை படுத்தவே இயற்கை நமக்கு கொடுத்த பாடமாக (கடும் தண்டனையாக), மனப்பூர்வமாக நாம் ஏற்று, இயற்கை சார்ந்த  அறவழியில் நடக்க நாம் உறுதி ஏற்போம்... இதுவே என் விருப்பமும் ஆசையும் கூட...

இயற்கைக்கு நன்றி...

குறிப்பு...

சென்ற வாரம் முகவரி மாணவி, என் தோழி டாக்டர் மீனாகௌரியிடம் இயற்கை தந்த வரம் என்ற தலைப்பில் நான் எழுதப்போகும் கட்டுரையை பற்றி விரிவாக சொல்லி இருந்தேன் (எங்களுக்குள், நிறைய விஷயங்கள், ஒளிவு மறைவு இல்லாமல், நல்ல புரிதலுடன் பகிர்ந்து கொள்வோம்)

தற்போது நிறைய மனிதர்கள் போராட்டமான வாழ்க்கையை வாழ்வதை பார்க்கும்போது, கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இல்லை. அவ்வளவு வேதனை உள்ளது... இருந்தாலும், முகவரி தம்பி, தங்கைகளான உங்களிடம் சொன்ன வார்த்தைக்கு தான், மீனாவிடம் சொல்லியதில் ஒரு பகுதியை மட்டும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

இந்த 70 நாட்களிலும் தனிப்பட்ட முறையில்  நான்(ரமேஷ்) பொருளாதார ரீதியாக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கனரா வங்கி தலைவர் ஆடிட்டர் டிஎன் மனோகரன் அவர்கள், என் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு ஒரு பெரும் தொகையை அனுப்பி வைத்து, உன்னை பாதுகாப்பது என் கடமை, நீ என் பெறாத பிள்ளை என்று சொன்ன போது, நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. இவர்க்கு எப்போதும் நான், என் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் (நான் கேட்காவிட்டாலும், என் நிலையிலிருந்து என்னை நினைத்துப் பார்த்து உதவி  செய்து, எனக்கு அவர் அனுப்பிய பணத்தைவிட... எனக்காக, அவர் நினைத்த நேரமே எனக்கான வரமாகும்_நான் CA படிக்கும் காலத்தில் ஒரு தடவையாவது, மனோகரன் ஐயாவை பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிய எனக்கு, இறைவனின் அருளால், உன்னை பாதுகாப்பது என் கடமை என்று மனோகரன் ஐயா சொன்னது, நான் செய்த பாக்கியமே)

நன்றி உணர்வே என் வாழ்க்கையாகும்...

--
With Hope...
Mugavari K Ramesh.

__._,_.___

Posted by: Mugavari K Ramesh <mugavariramesh@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities

.

__,_._,___
Share:

0 comments:

Latest Messages

Blog Archive

India Vision Team


Publisher and Patron
K. Srinivasan,
Team:
Shivanarayan Pasupathy
Jayatheerthan
Balamurugan
Subha Ganesh
Contact
prpoint@gmail.com

India Vision website and ezine

India Vision website offers lot of information about the various aspects of Vision 2020. Please download the ezines and podcasts on this theme. Please visit http://www.indiavision2020.org

India Vision Group



India Vision 2020 is the largest Indian group for youth to discuss the strategies for realising the devleoped India by 2020. This Blog carries the feed from the India Vision discussion group. Please join the group by clicking
http://groups.yahoo.com/group/India_Vision_2020/

Blog Archive