To realise the developed India by 2020

Thursday, November 26, 2020

[India_Vision_2020] என் இதயத்துக்கு மிகவும் நெருங்கிய தொடர்புடைய திரைப்படம்_சூரரைப் போற்று

 

அனைவருக்கும் காலை வணக்கம்..

நேற்று (25.11.2020) முழுவதும் சென்னையில் புயல் மழை... எங்கேயும் செல்ல முடியாத சூழ்நிலை... தற்போது OTT தளத்தில் வெளிவந்த சூரரை போற்று படத்தைப் பற்றி நிறைய பேர் நல்லவிதமாக சொன்னதால், அப்படத்தை பார்த்தேன்...

ஒரு உயர்ந்த நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, அதற்காக உழைத்தால், அந்த நோக்கமே தனக்கான, தனக்கேற்ற சூழ்நிலையை உருவாக்கி, தன் தேவைகளையும் பூர்த்தி செய்து (எவ்வளவு இடையூறுகள் வந்தாலும்), தன்  லட்சியத்தை தானே நிறைவேற்றிக் கொள்ளும் என்பது நிதர்சன உண்மை... இதற்கு தேவையான ஒன்று... தன்னலமற்ற தெளிவான நோக்கம் மட்டுமே...

இயக்குனர் சுதா கொங்கரா,இந்த ஒற்றை வரி கருவை (உண்மைச் சம்பவத்தை) கையில் எடுத்துக்கொண்டு, அழகான திரைக்கதை வழியாக, மிகவும் நேர்த்தியாக மக்களுக்கு கனெக்ட் (தொடர்பு) ஆகுற மாதிரி பதிய வைத்துள்ளார்... 

 வருங்காலத்தில் முகவரி மூலம் நல்ல தரமான பள்ளி கட்டுவதன் மூலம்,  வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கும் அதே நல்ல உயர்ந்த கல்வி, ஏழை எளிய மாணவர்களுக்கு கொடுக்க முடியும் என்ற என் நம்பிக்கைக்கு வலுவூட்டிய மிகச்சிறந்த திரைப்படமாகும் இந்தச் சூரரைப்போற்று படம்... ( பொதுவாக நான் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவன் ... திரைப்படங்கள் மூலமே, ஊக்கம் பெற்றுக் கொள்வதே என் சுபாவம்... முகவரி  ஆரம்பிக்கப்பட்டதும் அப்படியே... லகான் மற்றும் ரமணா திரைப்படங்கள் தான் எனக்கான கிரியா ஊக்கி திரைப்படங்கள் ஆகும்... அதனால்தான் என்னவோ,இயற்கை கொடுத்த வரமாக, ரமணா திரைப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அண்ணா அவர்களே முகவரி என்ற விதையை ஆழமாக விதைத்தார்... முகவரியின் முதல் மாணவியை படிக்க வைத்தவர் நம் முருகதாஸ் அண்ணாவே)

நான் சூரரைப் போற்று திரைப்படம் பார்க்கும் சமயத்தில், என் கண்களில், என்னை அறியாமலேயே தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது...

காரணம்... இரண்டு சம்பவங்கள் தான்...

ஒன்று... 24 வருடத்திற்கு முன்பு, நான் கல்லூரி சேர்வதற்கு (நாமக்கல் அரசு ஆண்கள் கல்லூரியில்) கல்லூரி கட்டணமாக  ரூபாய் 750  கட்ட வேண்டும்... என்னிடம் பணம் இல்லை... அப்பாவும் வெளியூர் கூலி வேலைக்கு சென்று விட்டார்... அந்த 750 ரூபாய் பணம் புரட்டு வதற்கு என் அம்மா பட்ட பாடு பெரியபாடு... ஒருவழியாக காலை 8 மணிக்குள் யார் யாரையோ பார்த்து, மிகவும் சிரமப்பட்டு, பணம் வாங்கி என்னிடம் கொடுத்தார்... ஆனால் 10 மணிக்கு கல்லூரியில் (நாமக்கல்) இருக்க வேண்டும்... நான், காலை 8 மணிக்கு தலைவாசலில் (சேலம் மாவட்டம்) உள்ளேன்...

எப்படியோ கல்லூரிக்கு, எங்கள் ஊரிலிருந்து, நாலு மணி நேர பயணத்தின் மூலம், சரியாக 12 மணிக்கு போய் சேர்ந்து விட்டேன்... சேர்ந்தும் பயனில்லை... நான் விரும்பி எடுக்க நினைத்த BSc வேதியியல் படிப்பிற்கான Admission முடிந்துவிட்டது... அங்கு இருந்த கல்லூரி ஆசிரியர்கள் என் ஏழ்மை நிலைமையைப் பார்த்து BSc கணிதம் படிக்கிறியா என்று கேட்டார்கள்... என் குடும்ப நிலைமை ஏதாவது படித்தாக வேண்டும்... நானும் சரி என்று கணிதத்தில் சேர்ந்தேன்... நன்றாக படித்தேன்... சரியான சமயத்தில் போக முடியாத காரணத்தினால் (பணம் கிடைக்காத) விரும்பிய படிப்பு கிடைக்காவிட்டாலும், கிடைத்த படிப்பில் கல்லூரியில் முதல் மாணவனாகவும் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது மாணவனாகவும் தேர்வு பெற்றேன்... அந்நிகழ்வு இப்படம் பார்க்கும் போது எனக்குள் தோன்றியது... சாதாரண இப்பணம் தானே, நான் நினைச்ச படிப்பைப் படிக்க விடாமல் செய்தது...

இரண்டாவது, மே 12,2008 வாக்கில் ஏதோ  என் உள்ளுணர்வு, சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்ற நினைப்பு என்னை ஆட்டிப் படைக்கிறது..(டிசம்பர் 26 , 2007ல் இருந்து மே 12,2008 வரை நிறைய பிரச்சினைகள் காரணமாக வீட்டிற்கு போகமுடியாமல், அப்பா அம்மாவை பார்க்க முடியாமல்... நான், கோயம்புத்தூர் ஈஷா மையம் மற்றும் திருப்பூர், வாவிபாளையம் சுந்தரமூர்த்தி அண்ணா வீட்டில் மாறி, மாறி இருந்து வந்த காலகட்டம் அது)... மே 12,2008 தேதி காலையிலிருந்து சுந்தரமூர்த்தி அண்ணாவிடம் நான் ஊருக்கு போகவேண்டும் பணம் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... என் நேரமோ என்னவோ தெரியவில்லை, அந்த நாள் அவரிடம்  பணம் இல்லை... மாலை மூன்று மணி வாக்கில், அவருக்கு தெரிந்த நபரிடம் கடன் வாங்கி (மணி அண்ணாவிடம்) ரூபாய் 300 கொடுத்து, என்னை ஊருக்கு அனுப்பினார்... நான் ஊர் வந்து சேர்வதற்குள் (ஒரு மணி நேரத்திற்கு முன்பு) என் அப்பா இறந்துவிட்டார்... ஒருவேளை காலையிலேயே, எனக்கு அந்த பணத்தை சுந்தரமூர்த்தி அண்ணா கொடுத்து இருந்தா, நான் முன்னமே ஊருக்கு வந்து, கடைசியாக அப்பாவை பார்த்திருப்பேன்... அப்பாவிடம் கடைசி நேரத்தில் கூட பேசமுடியாத துர்பாக்கியசாலி தான் நான் ( அவரின் கடைசி காலத்தில், அவர் நினைப்பு , ஏக்கம் எல்லாம் என் மீது மட்டுமே இருந்தது)... கடைசி தருணத்தில் அப்பாவிடம் பேச முடியாமல் போனதற்கு, சாதாரணம்  இந்த பணம் தானே காரணம்!!!

 இந்த சூரரை போற்று திரைப்படத்தில், தன் அப்பாவை பார்ப்பதற்காக... விமான டிக்கெட் எடுப்பதற்கு, பணம் இல்லாமல் தவிக்கும், சூர்யா அண்ணாவின் நடிப்பு, என்னை வாய் விட்டு அழ வைத்தது... சூர்யா அண்ணாவின் இயல்பான நடிப்பு (வாழ்ந்து காட்டிய விதம்) மிகப் பிரமாதம்... இந்த படத்தில் நடித்ததற்காக, சூர்யா அண்ணாவிற்கு தேசிய விருது கிடைக்க, இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்... வாழ்த்துக்கள் அண்ணா...

இந்த மாதிரியான எனக்குள் கனெக்ட்(தொடர்பு)ஆகும் காட்சிகள், நிறைய... அதே சமயத்தில், நான் நினைத்த,(மிகவும் குறைந்த கட்டணத்தில், ஏழை எளிய மாணவர்களுக்கு, முகவரியின் வருங்கால நல்ல தரமான பள்ளி) கனவில் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கையையும் எனக்கு வலு சேர்த்துள்ளது...

மிக அற்புதமான திரைப்படம் சூரரைப் போற்று... வாய்ப்பிருந்தால் அல்லது வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, OTT தளத்தில் கட்டணம் செலுத்தி திரைப்படம் பாருங்கள் (குறைந்தபட்ச நேர்மையை கடைபிடிப்போம்)...

இந்த மாதிரியான (சூரரை போற்று) நல்ல திரைப்படங்களை ஆதரிப்போம்,அதன் மூலம் வரும் வருமானத்தால்,  சூர்யா அண்ணா அகரம் பவுண்டேஷன் மூலம், நூற்றுக்கணக்கான ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைப்பார்...(ஏற்கனவே,இந்த படத்தின் வருவாய் மூலம்  கொடிய நோய் கரோனா ஆல் பாதிக்கப்பட்ட (பொருளாதாரத்தால்) துப்புரவு தொழிலாளி பிள்ளைகளின் படிப்பு செலவை, சூர்யா அண்ணா ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...)

நாம் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்கு... நாம்  முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெற, இந்த மாதிரியான திரைப்படங்கள் தான், நமக்கு கிரியா ஊக்கியாக செயல்படும் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை...

நம்பிக்கையுடன்...
முகவரி ரமேஷ்.

குறிப்பு...

இத்திரைப்படத்தில் வரும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஐயாவின் காட்சி மிகவும் அற்புதம்... அக்டோபர் 3,2013 அன்று, சென்னை கிண்டி ராஜ்பவனில் டாக்டர் அப்துல் கலாம் ஐயாவே நாங்கள் சந்தித்த அந்த பசுமை நினைவு (முகவரிக்கு நான் என்ன செய்ய வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து எங்களிடம், ஐயா கேட்டது) என்னுள் வந்து போனது... உங்கள் நல் ஆசி எங்களை சரியான பாதையில் வழிநடத்தும் என்பதே என் நம்பிக்கை... அதுவே எங்களுக்குப் போதுமானது ஐயா...
--
With Hope...
Mugavari K Ramesh.

__._,_.___

Posted by: Mugavari K Ramesh <mugavariramesh@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities

.

__,_._,___
Share:

Latest Messages

Blog Archive

India Vision Team


Publisher and Patron
K. Srinivasan,
Team:
Shivanarayan Pasupathy
Jayatheerthan
Balamurugan
Subha Ganesh
Contact
prpoint@gmail.com

India Vision website and ezine

India Vision website offers lot of information about the various aspects of Vision 2020. Please download the ezines and podcasts on this theme. Please visit http://www.indiavision2020.org

India Vision Group



India Vision 2020 is the largest Indian group for youth to discuss the strategies for realising the devleoped India by 2020. This Blog carries the feed from the India Vision discussion group. Please join the group by clicking
http://groups.yahoo.com/group/India_Vision_2020/

Blog Archive